மதுரை :
மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேர் ஆடி அசைந்து ஒய்யாரமாக சுற்றி வருகிறது.
மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 18-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. , அங்கயற்கண்ணி மீனாட்சிக்கும், சொக்க வைக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் பக்தர்கள் கோஷத்தினுடே, மங்கள வாத்தியம் இசைக்க கோலாகலமாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மனை கோவிலை சுற்றி உள்ள மாசி வீதிகளில் தேரோட்டம் நடந்து வருகிறது. சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.