ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.
இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.
தற்போது அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் எப்போதும், எதையும் வித்தியாசமாகவும், கொண்டாட்டமாகவும் அணுகும் மதுரை ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்தும் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.டெம்பிள் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற அமைப்பினர், போனி கபூர் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவை அப்படியே போஸ்டராக மாற்றி ‘திருவிழாவுக்கு நாள் குறிச்சாச்சு’ என்ற வாசகத்துடன் மதுரையின் பல இடங்களில் ஓட்டியுள்ளார்கள்.