சென்னை: மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள  எய்மஸ் மருத்துவமனைக்கான பணிகளை உடனே தொடங்க பிரதமருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன்பிறகு, வேறு எந்தவொரு பணிகளும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை உடனே தொடங்குங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்தில், கடிதத்தில், மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களும் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளார்.