டில்லி:
நித்தியானந்தா தன்னை மதுரை ஆதினமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில், நித்தியானந்தா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு, நித்தியானந்தா மீது மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ”மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வரும் நிலையில், நித்தியானந்தா தன்னை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக அறிவித்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், மீண்டும் மடத்திற்குள் நுழைய முயற்சிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த அக்டோபர் 11ம் தேதி நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் நுழைய இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2012 ஏப்ரல் 27ல் மதுரை மடத்தின் இளைய ஆதீனமாக தான் நியமனம் செய்யப்பட்டதாகவும், ஆகவே, ஆதீன மடத்திற்குள் நுழையவும், நிர்வாகங்களில் தலையிடவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கவேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 292 வது ஆதீனம் உயிரோடு இருக்கும் போது, 293வது ஆதீனம் என குறிப்பிடுவது எப்படி? என நித்யானந்தா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்காமல் நித்தியானந்தா தரப்பு காலதாமதம் செய்தால், கோபமடைந்த நீதிபதி, நித்தியானந்தாவை கைது செய்து 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையின்போது, நித்தியானந்தா சார்பில், மதுரை ஆதினத்தின 293 மடாதிபதியாக தன்னை கூறியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை நித்தியானந்தாவின் வக்கீல் திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.