சிதம்பரம் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்த மனு நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அந்தக் கோயிலின் பொது தீட்சிதர்கள் குழு அனுமதி மறுத்து வருகிறது.

இந்த நிலையில் பெண் பக்தையை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக தர்ஷன் (எ) நடராஜர் தீட்சிதரையும், அவரது அப்பா கணேசன் தீட்சிதரையும், கோயிலில் பணி செய்யக் கூடாது என்று தீட்சிதர்கள் குழு தடை விதித்தது.

பொது தீட்சிதர்கள் குழுவின் இந்த நடவடிக்கை குறித்து, தீட்சிதர்கள் தர்ஷன் மற்றும் கணேசன் இருவரும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் புகாரளித்தனர்.

இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்க இந்து சமய அறநிலையத்துறை, கடலூர், இணை ஆணையர் பரணிதரன், அவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இது தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் என்றும், அதில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவதற்கு உரிமை இல்லை என்றும் பதில் அனுப்பினர்.

இதையடுத்து தீட்சிதர்களை நீக்கியது தொடர்பாக சரியான காரணம் கூறப்படாததால் பொது தீட்சிதர்களின் தடை ஆணையை நீக்கி கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டார்.

ஆனால் அதன்பிறகும் அவர்களை பணியில் சேர்த்துக்கொள்ள பொது தீட்சிதர்கள் குழு மறுத்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இது தொடர்பாக தர்ஷன் தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், தர்ஷனை பணியில் சேர்த்துக் கொள்ளும்படி 2023-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அனுப்பிய உத்தரவை, ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்து அறநிலையத்துறை தங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும், கடந்த 16-ம் தேதி தீட்சிதர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி, “நடராஜர் கோவில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனக் கஷ்டங்களை போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல.

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா ? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கோயில் தங்களுக்கு சொந்தமானது என தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

பக்தர்கள் வரும் வரைதான் அது கோயில். இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும்.

கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும், சண்டைக்கு வருவதைப் போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால்தான் அங்கு பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது”’ என்று கடுகடுத்த நீதிபதி, பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த மனுவுக்கு, வரும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.