சென்னை: அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாமகவையும் தனது கூட்டணியில் தக்க வைக்கும் நோக்கில், பாமகவின் கோரிக்கையான அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை எடப்பாடி தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த சட்டம் மூலம் அரசு கல்வி வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி மற்ற சமூகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதை வரும் ஆகஸ்டு மாதம் 2வது வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக, சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.