சென்னை ஏழு கிணறு (Seven Wells) பகுதியில் தங்க நகைகளை திருடிய வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணை சென்னை மாநகர காவல்துறை டெல்லியில் கைது செய்துள்ளது.
ஆவடி, கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (44) தனது குடும்பத்துடன், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ஏழு கிணறு பகுதியில் உள்ள கடையில் இருந்து சுமார் 69 கிராம் தங்க நகைகள் வாங்கியுள்ளார். பின்னர், சௌகார்பேட்டை, பெருமாள் முதலி தெருவில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடும் போது, கூட்டத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள், அசோக் குமாரின் தாய் கேளம்மாள் வைத்திருந்த பையை பிளேடு கொண்டு கிழித்து, அதிலிருந்த நகைப் பெட்டியை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அசோக் குமார் அளித்த புகாரின் பேரில், ஏழு கிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு பெண்கள் குடும்பத்தை பின்தொடர்ந்து வந்து நகைகளை திருடியது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், அந்த பெண்களை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, பெண்களில் ஒருவர் தனது கணவரிடம் பேசுவதற்காக ஓட்டுநரின் செல்போனை பயன்படுத்தியதாக தெரிய வந்தது. அந்த செல்போன் எண்ணை கண்காணித்ததில், குற்றத்தில் ஈடுபட்ட பெண் டெல்லியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு போலீஸ் குழு டெல்லி சென்று, அங்குள்ள காவல்துறையின் உதவியுடன் மத்தியப் பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷிதா சிசோடியா (25) என்பவரை கைது செய்தது. விசாரணையில், தனது மாமியாருடன் சேர்ந்து நகை திருடிக் கொண்டு ரயிலில் தப்பிச் சென்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட தங்க நகைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அக்ஷிதாவுக்கு மாற்று வாரண்ட் பெற்று, போலீசார் மத்தியப் பிரதேசம் போடா பகுதிக்கு சென்று, 69 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.4,250 பணத்தை மீட்டனர். அதன் பின்னர் அவரை சென்னைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் விசாரணையில், அக்ஷிதாவுக்கு மும்பையில் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]