காட்னி:

ஹவாலா வழக்கில் நிலக்கரி தொழிலதிபருக்கு சம்மன் அனுப்பிய எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் தொழில்நகரமான காட்னி மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் கவுரவ் திவாரி. 2010ம ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த இவர் கான்பூர் ஐஐடி மாணவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஹவாலா பண பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக நிலக்கரி தொழிலதிபர் சதீஷ் சரவாகி, இவரது சகோதரர் மனிஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.

இவர்கள் மத்திய பிரதேச பாஜ அமைச்சர் சஞ்சய் பதாக்கின் தொழில் முறை கூட்டாளிகள். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2014ம் ஆண்டு பாஜவில் இணைந்தவர்.

சம்மன் அனுப்பியதற்காக எஸ்பி சவுரவ் திவாரி சிந்த்வாரா மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேர்மைக்கு பெயர் பெற்ற இந்த எஸ்பி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் பாலாகாட் மாவட்டத்தில் இருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் பந்த் நடந்தது. மாபியா கும்பல், குற்றவாளிகளுக்கு எதிராக எஸ்பி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஸ் வங்கியில் 40 கணக்குகள் போலியாக தொடங்கப்பட்டு ரூ. 500 கோடி வரை டெபாசிட் செய்தது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, இதில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் திவாரி என்பவர், தான் டம்மி என்று அமைச்சருக்காக தான் இதை செய்ததாக ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.