போபால்:
துபாயில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் வைத்த விருந்தில் கலந்துகொண்ட சுமார் 1500 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக துபாயில் இருந்து ம.பி. மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் என்பவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கடந்த மாதம் 17-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான மோரினாவுக்கு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 20ந்தேதி தனது தாயாரின் நினைவுநாளை முன்னிட்டு சுமார் 1500 பேருக்கு உணவு வழங்கி உள்ளார்.
இதற்கிடையில் சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த விருந்தில் கலந்துகொண்டவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரேஷின் நெருங்கிய உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. அர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பலர் கண்காணிக்கப்பட்ட வருவதாகவும், பலரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய மத்தியப் பிரதேச மருத்துவர் ஆர்.சி.பண்டில், இதுபோன்ற இக்கட்டான சூழலில் 1,500 பேருக்கு விருந்து கொடுத்தது மிகவும் தவறானது. மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டுதான் வருகிறோம். மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவரை கொரோனாவை நாட்டிலிருந்து விரட்ட முடியாது” என்று கூறி உள்ளார்.