ரியாத்:

சவுதி மன்னர் சல்மானின் மகன் முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பழமைவாத கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை இளவரசர் எடுத்தார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரச குடும்பத்தினரையும் அவர் கைது செய்தார். முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள ‘ரிட்ஸ் கார்ல்டன்’ என்ற பிரம்மாண்ட 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டனர். இதனால் இந்த ஹோட்டல் இணையதளத்தில் தற்போதைக்கு அறைகள் முன்பதிவு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலின் தரைத்தளத்தில் பாதுகாவலர்கள் ஆயுதங்களுடன் தங்கியருந்தனர்.

இதனால் அந்த ஹோட்டல் முழுவதும் சிறை வளாகமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் அறைகள் புக்கிங் நடைபெறும் என்று ஹோட்டல் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து இங்கு அறை புக்கிங் செய்யும் கால் சென்டர் ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘பிப்ரவரி 14ம் தேதி முதல் அறை புக்கிங் தொடங்குகிறது. ஆனால், கடைசி நேரத்தில் புக்கிங் ரத்து செய்யப்பட்டால் நிர்வாகம் பொறுப்பில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக ஹோட்டல் மூடியிருக்கும் காலத்தை உள்ளூர் அதிகாரிகள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

இது குறித்து ஹோட்டல் செய்தி தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த பிரச்னை தொடங்கிய நவம்பர் 5ம் தேதி முதல் ஹோட்டல் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இணைப்பு கொடுக்கப்படவில்லை.