பெர்லின்
உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டினர் வரத் தடை செய்துள்ளது. இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சர்வதேச விமானங்கள் தரை இறங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல விமானச் சேவை நிறுவனங்களில் பயணம் செய்ய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பல விமானச் சேவை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதில் புகழ்பெற்ற ஜெர்மன் விமானச் சேவை நிறுவனமான லுஃப்தான்சாவும் ஒன்றாகும்.
இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ஸ்டன் ஸ்போகர், “கொரோனா தொற்று எங்கள் விமானச் சேவை நிறுவனத்துக்கு எதிர்பாராத அவசர நிலையை அளித்துள்ளது. இந்த நிலை மாறும் வரை எங்களுடைய 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுட்டி வைக்கிறோம்.
இதே நிலை தொடர்ந்தால் விமானச் சேவை நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக் குறி ஆகிவிடும். அதன்பிறகு அரசு உதவி இன்றி விமானச் சேவை நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை உண்டாகும்” எனத் தெரிவித்துள்ளார்.