ரேகாவை சிறைக்கு அனுப்பிய ‘குலுக்கல்’

சென்னை டி நகர் ரங்கநாதன் தெருவில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வழக்கம்போல மக்கள் வெள்ளம்.

இந்த கூட்டத்துக்கு இடையே தான் கைப்பையில் இருந்து 5 சவரன் நகையை பறிகொடுத்தார் கல்லூரி பேராசிரியை ஒருவர்.

புகாரின் பேரில் சிசிடிவிக்களை ஆராய்ந்த போது மாஸ்க் அணிந்த ஒருவர் மட்டும் அந்தப் பகுதியில் இருந்து அவசர அவசரமாக பஸ்ஸை பிடித்து ஏறுவது தெரிந்தது.

ஆனாலும் அதை வைத்து போலீசாரால் முடிவுக்கு வர முடியவில்லை.

கடந்த வாரம் மே 18ஆம் தேதி மீண்டும் அதே டி.நகர் ரங்கநாதன் தெரு பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்து நகைகள் திருட்டு.

இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரி இருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி புட்டேஜ்களை போலீசார் தீவிரமாக ஆராய்ந்தனர்.

அங்குலம் அங்குலமாக அலசியதில் இரண்டு திருட்டுக்களிலுமே சம்பந்தப்பட்டவர் ஒரு பெண் என சந்தேகித்தனர்.

சிசிடிவி டிவி காட்சிகளைக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ந்த போது அந்தப் பெண் ஒரு கடைக்குள் செல்வதும் அங்கு பிரமோஷன் குலுக்கல் சீட்டில் தனது பெயரை பதிவு செய்வதும் தெரிந்தது.

இதுதான் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட். குலுக்கல் பதிவிற்காக அந்தப் பெண் செல்போன் நம்பர் உட்பட தன்னைப் பற்றிய விவரங்களை தந்து தந்து வைக்க, போலீசாரின் வேலை சுலபமாகிவிட்டது.

திருவெற்றியூரைச் சேர்ந்த ரேகா என்ற அந்த 30 வயது பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்த போது, அடிக்கடி காதில் ரத்தம் வந்து மயக்கம் அடையும் கடுமையான நோயாளி என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.

ஆனாலும் போலீசார் விடவில்லை அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிரமாய் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது ரேகா நல்ல ஆரோக்கியத் துடன் இருப்பதும் போலீசாரிடம் நடிப்பதும் அம்பலத்துக்கு வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையை கடுமையாக்க நகை திருட்டுகளை ஒப்புக்கொண்டார் ரேகா.

பெரிய நகை கடைகளில் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டு வெளியே வரும் பெண்கள்தான் இவரின் முதல் இலக்காம்.

மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், கோயம்பேடு, மாதவரம் என ரேகாவின் கைவரிசை பல இடங்களில் அரங்கேறி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

13 வயதில் திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தாயான பிறகு கணவனை விட்டு பிரிந்து இருக்கிறார் ரேகா.

ஷாப்பிங் மால்கள் உட்பட எங்கு வேலை செய்தாலும் கொஞ்ச நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கடைசியில் பெண்களிடம் தங்க நகைகளை பறித்தால் சுலபத்தில் வெறும் பணம் சேர்த்து விடலாம் என்று முடிவுக்கு வந்து அதன் பிறகே ‘கைப்பை அறுப்பு’ வேலைகளில் களமிறங்கியுள்ளார்.

– செய்திப்பிரிவு.