நாமக்கல்
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த எரிவாயு டேங்கர் லாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
எரிவாயு டேங்கர் லாரிகள் மூலம் உற்பத்தி ஆலைகளில் இருந்து நிரப்பும் நிலையங்களுக்கு எரிவாயு எடுத்துச் செல்லப்பட்டு வந்தன. இதற்கு மண்டல வாரியாக இருந்த டெண்டர் முறையை தற்போது மாநிலவாரியாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்தன. பல முறை டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு முடிவும் வராததால் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து நடந்த பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில் இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது டெண்டர் விதிமுறைகளில் எண்ணெய் நிறுவனங்கள் திருத்தம் செய்ய ஒப்புக் கொண்டதால் வேலை நிறுத்தம் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சங்கம் அறிவித்தது.