டில்லி
இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கும் மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு வழங்கி உள்ளது. இதில் இணைப்புத் தொகை மற்றும் முதல் சிலிண்டருக்கு பணம் வசூலிக்கப்படுவதில்லை. அடுத்த முறையில் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு வீட்டுக்கு மானிய விலையின் கீழ் வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இதற்காக உபயோகிப்போர் மானியம் அல்லாத விலை கொடுத்து வாங்கிய பிறகு அந்த மானியத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. எரிவாயு விலையை மாதத்துக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தன.
அவ்வகையில் இந்த மாதம் 1 ஆம் தேதி எரிவாயு விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சிலிண்டருக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டில்லியில் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.769 ஆகி உள்ளது.