சென்னை: அக்டோபர் 26-ஆம் தேதி மாநிலம் முழுவதும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் டெலிவரி மேன்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர். அதனால், . அன்றைய தினம் எல்.பி.ஜி சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் பணிகள் முடங்கும் நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது.
பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி சமையல் எரிவாயு ( எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்) டெலிவரிமேன்கள் வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தீபாவளி போனஸ் 12 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு, ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இண்டேன், ஹெச்.பி, பாரத் கேஸ் ஏஜென்சிகளில் சிலிண்டர் டெலிவரிமேன், மெக்கானிக், டிரைவர், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன், அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமென் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்க அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ் , “எல்.பி.ஜி சிலிண்டர் நிறுவனங்கள், ஏஜென்சிகளின் கீழ் சிலிண்டர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால், இந்த ஏஜென்சிகள் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில்லை. இது தொடர்பாக எல்.பி.ஜி. நிறுவனத்திடம் கேட்டால் ஏஜென்சியிடம் கேளுங்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், ஏஜென்சிகள் சிலரை மட்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் என அடையாளம் காட்டி அவர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கிவிட்டு, ஏராளமான தொழிலாளர்களுக்கு வெறும் சீருடைகளை மட்டும் வழங்கி ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். இதனால் ஏராளமான தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது.
இது குறித்து கேஸ் ஏஜென்சிகளிடம் கேட்டால் பணிக்கு வர வேண்டாம் என மிரட்டுகின்றனர். இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தத் தொழிலாளர்களின் நலன் கருதி எங்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அக்டோபர் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம்.”
இவ்வாறு கூறினார்.