சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் இன்னும் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதாவது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. அது தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. . இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து வருவதால் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி-கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இன்று சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர்,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் செல்ல தடை
தமிழ்நாட்டில் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டது.