இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவருடன் சென்ற அவரது மனைவி மாயமான நிலையில் அவர் காணாமல் போனதாக காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், சோனம் நேற்றிரவு உ.பி. மாநிலம் காஜிபூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சன்மைகா தொழில் செய்துவரும் கோவிந்த்தின் தங்கையும் தேவி சிங்கின் மகளுமான சோனத்துடன் கடந்த மே 11ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து மே 20ம் தேதி ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஜோடி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிற்கு தேனிலவு சென்றனர்.

ஷில்லாங் சென்ற நிலையில் மே 23ம் தேதிக்குப் பிறகு ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் இருவரும் தங்கள் வீட்டிற்கு தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர்கள் போன் அனைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மேகாலயா காவல்துறை தீவிரம் காட்டினர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஷில்லாங்கில் இருந்து ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஜோடி எடுத்துச் சென்ற வாடகை இருசக்கர வாகனம் ஒரு கிராமத்தில் கேட்பாரற்று நின்றிருந்ததைக் கண்டனர்.

பின்னர் அந்தப் பகுதியில் மேற்கொண்ட விசாரணையில், அந்த ஜோடியுடன் மேலும் மூன்று பேர் பின்தொடர்ந்து சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது விசாரணையை மேலும் தீவிரப்படுத்திய மேகாலயா காவல்துறை ஜூன் 2ம் தேதி சிரபுஞ்சி அருகே ஒரு நீர்வீழ்ச்சி பகுதியில் ராஜா ரகுவன்ஷியின் உடலை கண்டெடுத்தனர்.

ஆனால், சோனம் எங்கு இருக்கிறார் அவர் என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் தொடங்கியதோடு ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

அதேவேளையில் ஜூன் 5ம் தேதி இந்தூர் கொண்டுவரப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு உ.பி. மாநிலம் காஜிபூர் நெடுஞ்சாலையில் இருந்த தாபா ஒன்றில் பணிபுரியும் சாஹில் யாதவை அணுகி அவரது மொபைல் போனில் இருந்து தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார் சோனம்.

இதையடுத்து அவரது இருப்பிடம் குறித்து ம.பி. காவல்துறை மூலம் உ.பி. காவல்துறைக்கு அவரது பெற்றோர் தகவலளித்ததை அடுத்து உ.பி. காவல்துறை அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேவேளையில், ராஜா ரகுவன்ஷி கொலை குறித்து விசாரித்து வரும் மேகாலயா காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டதை அடுத்து சோனத்திடம் விசாரணை மேற்கொள்ள உ.பி. சென்றுள்ளனர்.

மேகாலயா காவல்துறை தலைவர் இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். சோனத்தின் சகோதரர் நடத்தி வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ராஜ் குஷ்வாஹா மற்றும் சோனம் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பேசி வந்ததாகவும் மொபைல் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு கூறியுள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ராஜ் குஷ்வாஹா, விக்கி தாக்கூர், ஆனந்த் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பேர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் என்றும் ஒருவர் ம.பி.யைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

அதில் இரண்டு பேர் நேற்றிரவு உ.பி. மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சோனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலரை தேடி வருவதாகவும் கூறினார்.

திருமணத்திற்கு முன்னான சோனத்தின் காதல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமா ரகுவன்ஷி மற்றும் ராஜாவின் சகோதரர் விபின் ரகுவன்ஷி இருவரும், சோனம் குறித்து எந்தவொரு தவறும் கூறமுடியாது என்றும் ராஜா – சோனம் இருவரும் நன்றாகவே பழகி வந்ததாகவும் கூறினர்.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக சோனம் சொல்வதை வைத்தே தங்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், தனது மகள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மேகாலயா காவல்துறையினர் தனது மகள் மீது களங்கம் கற்பிக்கப் பார்ப்பதாக சோனத்தின் தந்தை தேவி சிங் கூறியுள்ளதுடன் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் மேகாலயா தேனிலவு கொலை குறித்து பேசியுள்ள அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் பவுல் லிங்தோ, இது ஒரு முக்கோண காதல் விவகாரம் என்றும் இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகே யாரிடம் இருந்து யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது மற்றும் ஷில்லாங்கில் இருந்து காஜிப்பூருக்கு சோனம் எப்படி சென்றார் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே இந்த விசாரணை முழுமைபெறும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புது ஜோடி… கணவரை கொன்றதாக மனைவி கைது…