டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்ற போதும் வட மாநிலங்களில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தோல்விக்காக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்ததாகவும் அதை சோனியா காந்தி நிராகரித்ததாகவும் நேற்று செய்திகள் வெளியாகின. இதை காங்கிரஸ் மறுத்துள்ளது.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவருடன் அவர் சகோதரி மற்றும் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது ராகுல், “இந்த தோல்விக்கு நான் 100% பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். நான் காங்கிரஸ் தலைமையில் தொடர்வது குறித்து காங்கிரஸ் செயற்குழு முடிவு எடுக்கும். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்.
நான் முதற்கண் எனது பாராட்டுக்களை மோடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் காங்கிரஸ் தோல்வி அடைந்த போதிலும் வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையில் முழு மனதுடன் உழைத்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் இரு கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போர் ஆகும். இதில் தற்போது மோடியின் கொள்கை வெற்றி பெற்றுள்ளது.
அமேதி தொகுதியில் சென்ற முறை வாக்காளர்கள் என்னை 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிரிதி இராணியை எதிர்த்து வெற்றி பெற வைத்தனர். இம்முறை ஸ்மிரிதி இரானியை வெற்றி பெற செய்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை மனதார ஏற்கிறேன். எனது அன்பு எப்போதும் தோற்காது. நான் மேலும் வலிவுடன் மீண்டும் வருவேன்” என தெரிவித்துள்ளார்.