டில்லி :
இந்தியாவில் கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் பின்னால் பெரும்பாலும் இருப்பது காதல் விவகாரம்தான்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2001 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரையிலான வழக்கு விவகாரங்களில் பெரும்பாலும் காதல்தான் இருக்கிறது.
கடந்த 2001 முதல் 2015 வரை காதல் விவகாரங்களினால் 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல்கள் நடந்துள்ளன.
காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உ.பி., 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3வது இடத்திலும், தமிழகம் 4 வது இடத்திலும், ம.பி., 5வது இடத்திலும் உள்ளன.
காதல் தற்கொலைகளில் மேற்குவங்க மாநிலம் முதலிடம் வகிக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் 15,000 க்கும் அதிகமான தற்கொலைகள் இங்கு நடந்துள்ளன.
இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. இங்கு 9405 தற்கொலைகள் நடந்துள்ளன.
இந்தியா முழுதும் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்.
காதல் கொலை மற்றும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது சாதிதான் என்பதையும் இந்த புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த 15 ஆண்டுகளில் பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகும்.
அதாவது, பயங்கரவாதத்தால் உயிரிழப்பவர்களை விட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட ஆறு மடங்கு அதிகமாகும்.