டில்லி:
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மற்றும் 35ஏ பரிவு நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பாராளுமன்றத்தின் இரு அவைககளிலும் அறிவித்தார்.
இதற்கான தீர்மானத்தை அவர் தாக்கல் செய்தபோது, அதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கூச்சல் குழப்பங்களுக்கு இடையே ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவுகளை மாநிலங்களவை யில் அமித் ஷா அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே மேலும் கூச்சல் குழப்பம் நிலவியது. ராஜ்யசபாவில் அமித்ஷா தீர்மானத்தை தாக்கி பேசும்போது, கடும் கூச்சலும், குழப்பத்தையும் சில எம்பிக்கள் ஏற்படுத்தி வந்தனர். அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மற்றும் 35ஏ பரிவு நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்ததுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி மாநில அந்தஸ்தை இழந்து உள்ளது.
அதோடு, காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. காஷ்மீர், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் லடாக் சட்டப்பேரவையோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ இல்லாமல் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது.