சென்னை; நஷ்டத்தில் இயக்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் யூனியன் குற்றம் சாட்டி உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வசதிக்காக அரசு பேருந்துகள் மட்டுமின்றி, தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்கியதால், அரசுக்கு ரூ.50 கோடி இழப்பு போக்குவரத்து துறை தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 2022 – 2023-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நஷ்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஓய்வுபெறும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன் கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், திமுக அரசு, வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில்கொண்டு பெண்களுக்கு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் சாமானிய மக்கள் மட்டுமின்றி, மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் நடுத்தர மற்றும் உயர்வகுப்பு பெண்களும் இலவச பயணம் செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு மேலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், போதுமான அளவு புதிய பேருந்துகளை வாங்க முடியாமல், பழைய பேருந்துகளையே செப்பனிட்டு புதிய பேருந்துபோல வர்ணங்கள் பூசப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து துறை நிதி நிலைமை இவ்வாறு இருக்கையில், மக்களை கவரும் வகையில், தீபாவளியையொட்டி, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகளும், போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை மீறி அரசு அதிகாரிகள் துணையோடு, ஏராளமான தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கியது.
இந்த நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் யூனியன் குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ. டி.யு.) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தின் மிகப்பெரிய சேவை நிறுவனமாகும். தினமும் 1.75 கோடி மக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள், பருவகால நிகழ்வுகள். பண்டிகைகள் போன்றவற்றிற்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றன. ஆனால், நீண்டகாலமாக உள்ள இரு நடைமுறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளியையொட்டி சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் சரியற்றது. தனியார் பஸ்களை வாடகைக்கு எடுப்பதற்கு கீழ்கண்ட இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது:
- போக்குவரத்து பஸ்கள் சிறப்பு இயக்கத்திற்கு பயன்படுத்தினால் 1 கிலோ மீட்டருக்கு ரூ.90 வரை செலவாகும். தனியார் பஸ்சை இயக்கும்போது கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா மட்டும் கொடுத்தால் போதும். இதனால் இழப்பு தவிர்க்கப்படும்.
- . சிறப்பு இயக்கத்தையொட்டி பஸ்களின் வழித்தடத்தை மாற்றி இயக்கும் போது அன்றாடம் உபயோகிக்கும் பயணிகள் பாதிக்கப்படுவர்.
- மேற்கண்ட இரண்டு காரணங்களும் சரியற்றது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அரசு பஸ்களை இயக்கினால் ரூ.90 செலவாகும் என்பது சரியற்றது. தற்போது பல கழகங்களில் கிலோ மீட்டருக்கான இயக்க செலவு ரூ.65 மட்டுமே செலவாகிறது. வாதத்திற்காக ரூ.90 செலவாகும் என்று எடுத்துக் கொண்டாலும், பஸ் இயக்கத்தில் மாறும் செலவீனம் நிரந்தர செல்வீனம் என்ற 2 வகையான செலவீனங்களும் உள்ளது.
- தனியார் பஸ்களை இயக்கினாலும் நிரந்தர செலவீனத்தில் எவ்வித மாறுபாடும் ஏற்படாது மாறும் செலவீனம் மட்டுமே மிச்சமாகும் மாறும் செலவீனம் தற்போது கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.18 ஆகிறது தனியார் பஸ்கள் இயக்குவதால் ரூ.18 மட்டுமே மிச்சமாகும் அதேசமயம், சிறப்பு இயக்கத்தின் மூலம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.30-க்கு மேல் வருவாய் வரும். எனவே, சிறப்பு இயக்கம் இயக்குவதன் மூலம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.12 கழகத்திற்கு வருவாய் கிடைக்கும்
- இவ்வாறு வருவாய் கிடைப்பதை தவிர்த்துவிட்டு, தனியார் பஸ்களை இயக்கியதன் மூலம் சுமார் ரூ.50 கோடி கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ஏற்கனவே, நீதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகங்கள் தேவையற்ற முறையில் ரூ.50 கோடி இழப்பு ஏற்படுவது எவ்விதத்திலும் நியாய மற்றது.
- போக்குவரத்து கழகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் பேர். தற்போது பயணம் செய்பவர்கள் கோடியே 75 லட்சம் பேர்.
- 2 கோடிக்கு மேற்பட்ட பயணிகளை அன்றாடம் கையாண்ட போக்குவரத்து கழகங்களால் 1 கோடியே 75 லட்சம் பயணிகளை கையாள முடியாது என கூறுவதே சரியற்றது.
எனவே. மேலே கூறியு உள்ள விஷயங்களைப் பரிசீலித்து தமிழகத்தின் சிறப்புக்குரிய பொதுத்துறை நிறுவனமான போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.