புதுடெல்லி:
பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதன்படி, ஆய்வு மேற்கொண்ட நிடி ஆயோக் அமைப்பு இரண்டுவிதமான அறிக்கையை மத்தியஅரசுக்கு அளித்துள்ளது.
நிடிஆயோக் அறிக்கையில், நஷ்டத்தில் இயங்கி வரும் 74 பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிடும்படி மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய ‘நிடிஆயோக்’ அதிகாரி கூறியதாவது:
அரசின் சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு பல தடவை நிதி அளித்தும் அந்த நிறுவனங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. புத்துயிர் அளித்தும் லாபகரமான நிறுவனங்களாக மாற்ற முடியுமா என, ஆய்வு செய்யப்பட்டது.
ஆனாலும், இந்த நிறுவனங்களினால் வெற்றிகரமாக இயங்க முடியாத சூழலே உள்ளது. ஆகவே இதுபோன்ற நிறுவனங்களை தனியாருக்கு விற்கவோ அல்லது மூடி விடும்படியோ மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது என்றார்.
மேலும் பிரதமர் தலைமையிலான கேபினட் குழுவின் ஒப்புதல் பெற்ற பின்தான் மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி விரிவான திட்டங்களை தயாரிக்க முடியும்.
மூடப்படும் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுககு இழப்பீடு வழங்குதல், அந்த நிறுவனங்களின் சொத்துக்கள் ஆகியவற்றை கண்டறிந்து அதன் பின்னரே தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் மூடப்படும் அந்த எட்டு நிறுவனங்கள் எது என்ற விவரத்தை தற்போது கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இரண்டு பட்டியல்கள் தயார் செயது பிரதமர் அலுவலகம் அனுப்பி உள்ளதாகவும், ஒரு பட்டியிலில் மூடவேண்டிய நிறுவனங்கள் பற்றிய விபரங்களும், மற்றொன்றில், அரசின் பங்குகளை விற்கலாம் எனக் கருதப்படும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
தவிர, முழுமையாக விற்கக்கூடிய அல்லது தனியார் மயமாக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியிலும், நிடி ஆயோக் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம், 56 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்று, 20 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து, மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட் விவாதத்தின்போது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.