லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் புகழைப் பற்றி வார்த்தைகளில் வர்ணிப்பது அவ்வளவு எளிதல்ல. இது கிரிக்கெட் விளையாட்டின் இல்லம் என்று அழைக்கப்படுவதோடு, உச்சகட்டமாக, கிரிக்கெட்டின் மெக்கா என்றே வர்ணிக்கப்படுகிறது.

கடந்த 1814ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம், உலகின் மிகப் பழமையான அருங்காட்சியகத்தின் தாயகமாக திகழ்வதோடு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகமாகவும் திகழ்கிறது.

இந்த மைதானத்தில் கடந்த 1890ம் ஆண்டு கட்டப்பட்ட பெவிலியன் முனை, உலகின் மிகச்சிறந்த விளையாட்டுத் துறை கட்டமைப்புகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது.

லார்ட்ஸ் மைதானம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் ஒரு தனி சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்த மைதானத்தின் பால்கனியில் இருந்து கொண்டு, கடந்த 2002ம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு எதிரான சாதனை வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தனது பனியனை கழற்றி காற்றில் சுழற்றியதை மறக்க முடியாது.

இந்த மைதானத்தில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் 10 ஆட்டங்கள் நடந்துள்ளன. 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய உலகக்கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடந்ததை வைத்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

இந்த 2019 உலகக்கோப்பையின் 5 ஆட்டங்கள் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜுலை 14ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியும் அதில் அடக்கம்.

ஆனால், இந்தியா ஆடக்கூடிய எந்த சுற்று ஆட்டங்களும், இந்த மைதானத்தில் நடைபெறவில்லை என்பது நமக்கெல்லாம் சற்று சோகமான விஷயமே..!