டெல்லி: மக்களவையில் நுழைய முயன்றபோது, ராகுல் காந்தி தாக்கப்பட்டார் என காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநயாகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அம்பேத்கர் விவகாரம் குறித்து பாஜக எம்.பி.க்கள், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடத்திய பேரணியில் சலசலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டதில் பாஜக எம்.பி. கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மண்டை உடைந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, ராகுல் காந்தி ‘தள்ளி விட்டதால்’ என் மண்டை உடைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார். அவர் என் மீது விழுந்ததில், நான் கீழே விழுந்தேன். நான் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்தேன் அப்போது வந்த ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார் என கூறியுள்ளார்.
இதனால், சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கு பதில் கூறிய ராகுல்காந்தி, தான் தான், உள்ளே செல்ல முயன்றபோது பா.ஜ., எம்.பி.,க்கள் என்னை தள்ளினர்…” என கூறினார்.
இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், “இரண்டு தலைவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 4-5 எம்.பி.க்கள் இது குறித்து புகார் அளித்துள்ள னர்.. போராட்டம் நடத்த அனைத்து பி.எஸ்.களுக்கும் உரிமை உள்ளது. அவர் (ராகுல் காந்தி) உடல் ரீதியான வன்முறையை செய்தார், அவர் கூட செல்லவில்லை. சாரங்கி ஜியின் நிலையைப் பாருங்கள்…அவர்கள் (காங்கிரஸ்) பி.ஆர்.அம்பேத்கருக்கு எப்போதும் அநீதி இழைத்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் கிரண் ரிஜிஜூ, பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, ராகுல் தாக்கியதில் பா.ஜ., எம்.பி முகேஷ் ராஜ்புத் காயம் அடைந்து இருக்கிறார். எம்.பி.,க்கு சிறிது ரத்தம் கசிந்துள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் தனது வலிமையை காட்ட, பா.ஜ., எம்.பி.,க்களை தாக்கியது சரியல்ல.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ராகுலிடம் கூற விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபட, ராகுலுக்கு அதிகாரம் வழங்கியது யார்? எம்.பி.க்கள் மீது ராகுலின் உடல்ரீதியான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றவர், ராகுலின் கோபம், விரக்தியை காட்டுகிறது. ராகுலுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூற விரும்புகிறேன்.
நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதால் மட்டும், உடல் ரீதியாக பழிவாங்கவில்லை. நாங்கள் எங்கள் உடல் வலிமையை மற்ற எம்.பி.க்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம். ஏனென்றால் நாங்கள் அதை நம்பவில்லை. நாங்கள் அகிம்சையை நம்புகிறோம். நாங்கள் அகிம்சையில் நம்பிக்கை வைப்பதாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதாலும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ராகுலை உள்ளே விடாமல் பாஜக எம்.பி.க்கள் தாக்கினர் என காங்கிரஸ் கட்சி தரப்பில், சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கே.சுரேஷ் மற்றும் மாணிக்கம் தாகூர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி உள்ளனர்.
அதில், … நாங்கள் மகர் துவார் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் உள்ளே நுழையவிடாமல் உடல் ரீதியாக தடுத்தனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உடல்ரீதியாக தாக்கினர் என கூறி உள்ளனர்.
