லண்டன்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே -785 ரக விமானம் இன்று வந்தது. இந்த விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.50 மணிக்கு வந்து தரையிறங்கியது.

அப்போது, அங்கு வந்த இங்கிலாந்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் திடீர் சோதனை நடத்தினர். பயணிகளை வெளியேற்றிவிட்டு விமானத்தில் பணியாற்றிய 14 சிப்பந்திகளையும் தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனைக்கு பின்னர் விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. நம்பத் தகுந்த தகவல்கள் வந்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக லண்டன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித்தொடர்பாளர் மஷ்மூத் தஜ்வார் கூறுகையில், ‘‘விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இந்த விவகாரத்தை பிரிட்டிஷ் விமான போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வோம்” என்றார்.