டெல்லி: பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கோஷம் எழுப்ப  தடை உள்பட வேறு எந்த கருத்தையும் பேசக்கூடாது என தடை செய்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை விதிகளில் திருத்தம் செய்து அறிவித்து உள்ளார்.

மக்களவையில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்போது சிலர் எழுப்பிய கோஷங்கள், விதிகளுக்கு முரணாக வாழ்க போன்ற கோஷங்கள் எழுப்பியது  சர்ச்சையை ஏற்படுத்திய   சில நாட்களுக்குப் பிறகு, சபாநாயகர் உத்தரவின் பேரில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் பதவி ஏற்றதுடன், சபாநாயகர் தேர்தலும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  நடைபெற்ற அமர்வுகளில் எதிர்க்கட்சிகளின் கூச்சல், அமளி காரணமாக அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த அமளிகளுக்கு இடையே குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டத.

இந்த நிலையில்,  மக்களவையில் எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது,  மற்றவர்கள் முழக்கங்களை எழுப்பத் தடை விதிக்கும் வகையில், மக்களவை விதிகளில் திருத்தம் செய்து அவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்து உள்ளார்.

அண்மையில் மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோருது,  பல எம்.பி.க்கள் நடைமுறைக்கு மாறாக பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். ‘அரசமைப்புச் சட்டம் வாழ்க’, ‘ஹிந்து தேசம் வாழ்க’ போன்ற போட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘பாலஸ்தீனம் வாழ்க’ என்றுகூட ஒரு எம்.பி. கோஷமிட்டாா். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பாராளுமன்றத்தின் மாண்பை குறைப்பதாக இருந்தது.

இதுகுறித்து கண்டித்த சபாநாயகர், எம்.பி.க்கள்  பதவியேற்பின்போது பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டுமென  வலியுறுத்தியிருந்தாா். தங்களின் அரசியல் செய்தியை வெளிப்படுத்த புனிதமான சத்தியப் பிரமாண நிகழ்வை எம்.பி.க்கள் பயன்படுத்துவதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும் குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்த நிலையில், அவை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான மக்களவைத் தலைவரின் விதிமுறைகளில் விதி எண் 1-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது உறுதிமொழிக்கு முன்னொட்டு அல்லது பின்னொட்டாக வேறெந்த கருத்தையும் தெரிவிக்க தடை விதிக்கும் புதிய பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது.