புதுடெல்லி:

அனுமதி இல்லாமல் பேரணி நடத்தி, தேர்தல் விதிமுறையை மீறியதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஜகன்புரா பகுதியில் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் கவுதம் காம்பீர் கூட்டம் நடத்தியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது குறித்து, கவுதம் கம்பீர் மீது டெல்லி கிழக்கு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கே.மகேஷ் புகார் கொடுத்தார்.

இதன் அடிப்படையில், கம்பீர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் ஹரிஸ் குராணா கூறும்போது, கம்பீர் முறைப்படி அனுமதி பெற்றே கூட்டம் நடத்தியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தை அணுகி முறையிடுவோம் என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளர் அட்டிஷி ட்விட்டர் பதிவில், விதிமுறை தெரியாத போது எதற்கு விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.