டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் உ.பி. மாநிலம் ரேபரேலி உள்பட உ.பி., ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் உள்பட பல வட மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகுத்து வருகிறது. இது கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கேரளா, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்து வருகிறது.
18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
காலை 9மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 32 இடங்களிலும் முன்னணியில் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளன.
ஆனால், ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களின்படி, காலை 9.00 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும்போது பாஜக முன்னிணியில் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் இண்டியாக கூட்டணியும் அதிக தொகுதிகளில் முன்னணியில் வந்துகொண்டிருக்கிறது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 20 வரை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 22 முதல் 35 இடங்களை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,. கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், இந்த 3 மாநிலங்களிலும் பாஜகஎ தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் ராகுல்போட்டியிடும் ரேபரேலி உள்பட பல தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னணியில் உள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானிலும் இண்டியாக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதுபோல, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடப்பது கவனிக்கத்தக்கது.