புதுடெல்லி:
புதுடெல்லி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் யானை, குதிரை, புரோகிதருக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களை பொறுத்து, வேட்பாளர் செலவு செய்யும் தொகை ரூ.50 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரை தேர்தல் ஆணையம் நிர்ணயத்துள்ளது.
புதுடெல்லியில் ரூ. 70 லட்சமும், யூனியன் பிரதேசங்களில் ரூ.54 லட்சமும் செலவு செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் யானைக்கு ரூ.5 ஆயிரம், குதிரைக்கு ரூ.2,500, புரோகிதருக்கு ரூ. 553 என கட்டணத்தை நிர்ணயித்துள்ளார் தேர்தல் அதிகாரி.
அதோடு, சரியாக செலவு செய்யப்படுகிறதா என கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
சமோசா உட்பட உணவு வகைகளுக்கும் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்றும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையம் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு சுற்றினாலும், இதெல்லாம் சாத்தியமில்லை என்கிறார்கள் இவற்றை வாடகைக்கு விடுபவர்கள்.
தேர்தலின் போது குதிரை ரூ.10 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
யாராவது ரூ.2,500-க்கு குதிரையை வாடகைக்கு விடுகிறோம் என்று சொன்னால், அது குதிரையாக இருக்காது. கழுதையாக இருக்கும் என்கிறார்கள் வாடைக்கு விடுவோர்.
டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் கூறும்போது, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்துவிட்டுத் தான் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது இந்த செலவு பட்டியலில் யானை, குதிரையை வாடகைக்கு எடுப்பதையும் சேர்த்துள்ளோம். யானை, குதிரைகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதற்கு முன்பு, வனத்துறையினரிடம் அனுமதி பெறுகிறோம். அதன்பிறகே அவற்றை பயன்படுத்த அனுமதிக்கிறோம் என்றனர்.