டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி அளவில், மத்தியில் பாஜக முன்னிலையிலும், அதைத்தொடர்ந்து இண்டியா கூட்டணி அதிக இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மாநிலத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் காலை 10 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாக உள்ளது. அதில், பாஜக 303 இடங்களிலும், காங்கிரஸ் 210 இடங்களிலும், முன்னணியில் உள்ளன. ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும்போது, இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் இண்டியா கூட்டணிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் பாஜக கூட்டணி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் தேர்தல் முன்னணி நிலவரம் தெரிய வந்துகொண்டிருக்கிறது.