டில்லி:

ந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க, சமூக இணையதளங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்றைய நவீன யுகத்தில், தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், பிரசாரங்கள், விளம்பரங்கள் போன்றவை சமூக இணையதளங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க,  டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், கூகுள், டிக்டாக், ஷேர் சாட் ஆகிய 6 சமூக ஊடகங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

வரும் 19ந்தேதி (செவ்வாய்கிழமை) சமூக இணையதள நிர்வாகிகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை யின்போது,சட்டவிரோதமான செய்திகள் பரப்புவதை தடுப்பது மற்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிரக் கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல, ஊடகங்களில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்பு கருத்துக் கணிப்புகளை வெளியிடுதல் போன்றவற்றையும் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.