டெல்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ப் 10ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள், மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மத்திய அமைச்சர் பிரதான், திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என காட்டமாக விமர்சித்தார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்தியஅமைச்சர் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக இருஅவைகளும் அமர்களப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை (மார்ச்.14 ) ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவின்படி, ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று (மார்ச்.13) மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்த நாடாளுமன்றம் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் 17ந்தேதி கூட உள்ளது.
இன்றைய தின விடுமுறை அறிவிப்பை ஈடுகட்ட மார்ச் 29ம் தேதி சனிக்கிழமையன்று அவையை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.