டெல்லி:  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில்,  எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக  நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டம் 27ந்தேதி காலை 11மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று ( நவம்பர் 25ந்தேதி – திங்கட்கிழமை)  காலை 11மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும்,   இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக,  வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல அவை தொடங்கியது. அவையின் வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், எதிர்க்கட்சிகள் தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், உ.பி. மாநிலம் சம்பல் வன்முறை குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  இதுகுறித்த லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் துவங்கியதும், இந்த விவகாரத்தை விவாதிக்க கோரி, காங்., – திரிணமுல் காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணியினர் கோஷம் எழுப்பினர்.

 தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். அவை துவங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக, லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் நாளை மறுதினம் (27ந்தேதி) காலை 11மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.