டில்லி
அதிமுக, தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் மக்களவை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நிதிநிலை அறிக்கக் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இந்த அமர்வில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கக் கூடும் என ஏற்கனவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆளும் பா ஜ கட்சி மேல் அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருவதால் இந்த எதிர்பார்ப்பு மேலும் வலுவானது.
இந்நிலையில் இன்று அமர்வு தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியனர் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் மக்கள் அவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த தொடர் அமளியால் மக்களவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்று நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. நாளை மீண்டும் அவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.