காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது.

“கடந்த எட்டு மாதங்களில், 11 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இந்த நிலையங்களில் சிசிடிவி சரியாக வேலை செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது. எனவே, ‘காவல் நிலையங்களில் சிசிடிவி போதுமான அளவு செயல்படவில்லை’ என்ற தலைப்பில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

மனித உரிமை மீறல்களைத் தடுக்க காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

2020 டிசம்பரில், சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் என்ஐஏ போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பதிவு சாதனங்களை நிறுவுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஒவ்வொரு செயல்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் முழு காவல் நிலையத்தின் நுழைவாயில், வெளியேறும் இடம், பிரதான வாயில், லாக்-அப், தாழ்வாரங்கள், வரவேற்பு மேசை போன்ற இடங்களில் சிசிடிவிகள் நிறுவப்பட வேண்டும் என்றும் இரவு நேரக் காட்சிகளையும் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டையும் பதிவு செய்யும் திறன் கொண்ட தரமான கேமராக்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கான காட்சிகளைப் பதிவு செய்யும் திறனுடன் இருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கப்பட இந்த உத்தரவு பல காவல்நிலையங்களில் பின்பற்றப்படாததை அடுத்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.