டெல்லி: இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக உள்ளூா் மொழி இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மத்தியஅரசு இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறது. தேசிய மொழி இந்தி என்ற கூறி வருகிறது. மேலும், கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் வரையிலான கல்வி நிறுவனங்களில் கட்டாயப் பயிற்று மொழியாக இந்தி, அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் கட்டாய ஆங்கிலத்துக்குப் பதிலாக அந்தி தாள்கள், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி அதிகாரப்பூர்வ மொழி என இந்தியை முன்னிலைப்படுத்தி வருகிறது. இதுபோன்ற அறிக்கைகளை  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழிக் குழு தனது சமீபத்திதில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக உள்ளூா் மொழி இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு கடந்த 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அலுவல் மொழிச் சட்டம் 1963-இன் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், 20 மக்களவை எம்.பி.க்கள், 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தம் 30 எம்.பி.க்கள் உள்ளனா். இந்தக் குழு இந்தியை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, பல்வேறு பரிந்துரைகளுடன் குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமா்ப்பித்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அறிக்கை சமா்ப்பிக்கப்படும் நிலையில், இந்த முறை 3 ஆண்டுகளுக்குள் இரண்டு அறிக்கைகளை அந்தக் குழு சமா்ப்பித்துள்ளது. சமீபத்தில் தனது 11-ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம்  சமா்ப்பித்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள அந்தி பேசும் மாநிலங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரியா வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஐஐடிக்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரியா வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக உள்ளூா் மொழிகள் இருக்க வேண்டும். விருப்பம் இருந்தால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்

இந்தி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், தில்லி மற்றும் அந்தமான்-நிகோபா் தீவுகள் உள்ளன. ‘பி’ பிரிவில் குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், சண்டீகா், டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நகா் ஹவேலி உள்ளன. நாட்டின் இதர பகுதிகள் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் உள்ள மாநிலங்களில் ஹிந்திக்கு மதிப்புக்குரிய இடம் அளிக்கப்பட்டு, அதன் பயன்பாடு 100 சதவீதமாக இருக்க வேண்டும். ஆள்சோ்ப்பு தோ்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதை கைவிடுதல். இந்தி பேசும் மாநிலங்களில் உயா் நீதிமன்றங்களின் உத்தரவுகளை ஹிந்தியில் மொழிபெயா்க்க போதிய ஏற்பாடுகள் செய்தல்.

இந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் வேண்டுமென்றே ஹிந்தியை பயன்படுத்தாவிட்டால், அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அதற்குப் பிறகும் அவா்கள் ஹிந்தியை புறக்கணித்தால், அது அவா்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் எதிரொலிக்க வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் போன்றவை ஹிந்தி அல்லது உள்ளூா் மொழிகளில் இருக்க வேண்டும் ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தி இருக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.