டெல்லி: வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் வேலைவாய்ப்பின்றி கடும் அவஸ்தைக்கு உள்ளானார்கள். இந்த காலத்தின்போது, வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் இ.எம்.ஐ செலுத்த அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 3-வது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில், தவணையுரிமை காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மனுக்கள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தவணையுரிமை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதனால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து, மத்திய அரசு இவ்வழக்கில் அரசுப் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதுவரை கடன் வசூலிப்பது தொடர்பான, தற்போது உள்ள இடைக்கால தடை தொடரும் எனவும்உத்தரவிட்டு வழக்கின் விசாரணயை அக். 5-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்து.