சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை  என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்  விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  பரவல் காரணமாக,  கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா  காரணமாக எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது, தற்போது, தொற்று பரவல் குறைந்துள்ளதால், சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த   அமைச்சர் மா.சுப்பிரமணியன், “5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதும். மழலையர் பள்ளிக் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது; இந்திய அளவில் 74 இடங்களில் மட்டுமே ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 18,580 பேர் பயன்பெற்றுள்ளனர்; 48 மணி நேரத்திற்குள்ளான சிகிச்சைக்காக  ரூ 16.97 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்றார்.