புதுடில்லி: லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் தனது கட்சி, எதிர்வரும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தனியாக நிற்கப் போகிறது என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 2014 தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டு தோல்வியுற்ற எல்ஜேபி, இந்த முறை 50 இடங்களிலிருந்து வேட்பாளர்களை நிறுத்தவிருப்பதாக பாஸ்வான் கூறினார்.
ஜார்க்கண்ட் தேர்தல் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முடிவுகள் டிசம்பர் 23 அன்று அறிவிக்கப்படும்.
“லோக் ஜனசக்தி கட்சி 50 இடங்களுக்கு மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படும்”,என்று சமீபத்தில் தனது தந்தையும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பாஸ்வான் ட்வீட் செய்துள்ளார்.
செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யின் அறிக்கையின்படி, எல்.ஜே.பி தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தது. எவ்வாறாயினும், எல்.ஜே.பிக்கு தேர்தல் ரீதியாக வழங்குவதற்கு அதிகம் இல்லை என்று அதன் தலைவர்கள் நம்பியதால் காவி கட்சி தயக்கம் காட்டியது. பாஜகவும் எல்ஜேபியும் அண்டை மாநிலமான பீகாரில் தோழமைக் கட்சிகளாக இருக்கின்றன.
திங்களன்று பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது, ஜார்க்கண்டில் அதன் மற்ற கூட்டாளியான ஆல் ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ) ஒருதலைப்பட்சமாக பல வேட்பாளர்களை அறிவித்தது.
பீகாரில் பாஜகவின் தோழமைக் கட்சியான ஜனதா தளம் (யுனைடெட்) ஜார்க்கண்டில் தனியாக தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆகியவை மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஜார்க்கண்ட் சட்டசபையில் 81 இடங்களில் 31 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். ஆர்.ஜே.டி ஏழு இடங்களுக்கு போட்டியிடும், அதே நேரத்தில் கூட்டணி பங்கின் மிகப்பெரிய பகுதியான 43 இடங்களுக்கு ஜே.எம்.எம் போட்டியிடும்.