லிவிங் டு-கெதரில் இருந்த ஜோடி பிரிந்த நிலையில் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு இளம்பெண் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றுள்ளது, ஜார்படா பகுதியைச் சேர்ந்த சோம்நாத் ஸ்வைன் என்ற நபர் கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு நேற்றிரவு 10:30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.
சோம்நாத்தின் சகோதரி அளித்த அந்த புகாரில் கடத்தியவர்கள் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சோம்நாத்தின் மொபைல் தரவுகள் மற்றும் உளவுப் பிரிவினரின் தகவலை சேகரித்த காவல்துறையினர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிராப்தி சர்மா என்ற பெண்ணுடன் சோம்நாத் லிவிங் டு கெதரில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் பிராப்தி சர்மா குறித்த விவரங்களை சேகரிக்க தொடங்கிய போலீசார், அதேவேளையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரிடம் பணம் தருவதாகக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லியுள்ளனர்.
பணத்தை வாங்க வரும்போது போலீசார் தங்களை பிடித்துவிடுவார்களோ என்று பயந்த அவர்கள் போக்கு காட்டியுள்ளனர்.
இந்நிலையில் செல்போன் டவர் உள்ளிட்ட தரவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அவர்கள் ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டலுக்குள் புகுந்த காவல்துறையினர் பல மணி நேரம் போராடி சோம்நாத்தை மீட்டுள்ளனர்.
இதில் போலீசார் சந்தகேப்பட்டது போல் சோம்நாத்துடன் லிவிங் டு கெதரில் இருந்து பிரிந்து சென்ற பிராப்தி சர்மா வேலை என்பது தெரியவந்தது.
சோம்நாத்துடன் சேர்ந்து வாழ்ந்த நேரத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுக்கு பழி தீர்க்கவே அவரை கடத்தி துன்புறுத்தியதாகவும், இந்த கடத்தல் சம்பவத்திற்கு அவரது சகோதரியின் காதலன் உள்ளிட்ட மேலும் இரண்டு ஆண் நண்பர்கள் உதவியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.