பீஜிங்: பதப்படுத்தப்பட்ட பேக்கிங் உணவுகளில் கொரோனா வைரஸ் உயிருடன்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதன்முதலில் கொரேனா வைரஸ் சீனாவின் உகான் நகரத்தில் உள்ள மாமிச சந்தையில் இருந்து உருவானதாக கூறப்பட்டது. பின்னர் அங்கு நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் இருந்து வெளியானது என தகவல்கள் பரவின. எது எப்படி இருந்தாலும், 2019ம் ஆண்டு  ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவி, இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளை சின்னப்பின்னப்படுத்தி இருப்பதுடன், உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. ஆனால், உலக நாடுகள் இன்றளவும் தொற்றை முழுமையாக அழிக்க முடியாமல் போராடி வருகின்றன.

இந்த நிலையில்,  தற்போது , சீனாவில்,  பதப்படுத்தி, உறைய வைக்கப்பட்ட பேக்கிங்  உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிருடன் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சி.டி.சி. என்று சொல்லப்படுகிற சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  தெரிவித்து உள்ளது. உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த தகவல், இதுவரை வேறு எந்த நாட்டு ஆராய்ச்சியிலும் தெரியவராத நிலையில்,  தற்போது சீனா அறிவித்துள்ளது சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்டு,  கிங்டாவோ நகரில் பதப்படுத்தி உறைய வைக்கப்பட்டிருந்த உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிருடன் வாழ்ந்து வந்தது என்று தெரிவித்துள்ள சீனா அரசு, இந்த உணவுப்பொருள் எந்த நாட்டில் இருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், உடனடியாக, துறைமுகப்பகுதியான கிங்டாவோ  நகரத்தில் வாழும் சுமார்  1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் உடனடியாக கொரோனா தொற்று சோதனை நடத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில், சீனாவின் பிரதான பகுதிக்கு வெளியே 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே  கடந்த ஜூலை மாதம், ஒரு கண்டெய்னரின் உள்சுவரிலும், ‘பேக்கேஜிங்’கிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறைந்த இறால் இறக்குமதி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இறக்குமதி அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ்  இருப்பதாக அறிவித்து உள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை எந்தவொரு நாடும், சீனாவின் தகவலை உறுதி செய்யப்படவில்லை.  இந்திய சுகாதாரத்துறை அமைச்சரும்,    சீனா கூறியிருப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றால்,  ‘பாக்கெட் உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், இறைச்சிகளை வாங்குவதில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது’ என்று  தெரிவித்து உள்ளார்.  கமிஷன் நேற்று தெரிவித்தது.