டெஹ்ரான்: ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை. 7000 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.

மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் படி ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 பேரை மீட்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

அதற்காக இந்தியாவில் இருந்து மருத்துவர்கள் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் ஈரானில் உள்ள 254 இந்தியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தது.

12 நாட்களாக சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்த ரத்தமாதிரி முடிவுப்படி 254 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இருப்பினும், ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், சிக்கித் தவிக்கும் அனைவரையும் சில நாட்களில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உறுதி அளித்துள்ளனர்.

இது குறித்து அங்கு சிக்கி தவித்து வரும் யாத்ரீகர்களில் ஒருவரான முகமது இம்ரான் கூறுகையில், அவர்கள் கடந்த 10-12 நாட்களில் சிக்கித் தவித்த அனைத்து பயணிகளிடமிருந்தும் மாதிரிகள் எடுத்திருந்தனர், இப்போது முடிவுகள் வந்துவிட்டன என்றார்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் 2 நாட்களுக்கு முன்பு ஒரு தூதரக அதிகாரியால் வாட்ஸ் அப்பில் எங்களுக்கு அனுப்பப்பட்டது என்று கார்கில் பகுதியில் இருந்து வந்த யாத்ரீகரான ஷேக் அலி கூறியிருக்கிறார்.

அந்த பட்டியலில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், பாஸ்போர்ட் எண், பிஎன்ஆர் தகவல்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. 254 பேர் மட்டுமல்லாது ஈரானில் இருக்கும் மற்ற இந்தியர்களின் தகவல்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்றார்.

ஆனால் இந்த பட்டியலின் உண்மைத் தன்மை குறித்து தூதரக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வாட்ஸ் அப்பில் அனைவருக்கும் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டதால் அவ்வாறே செய்துவிட்டோம் என்று கூறி உள்ளனர்.