‘ஊரடங்கில் நோ மது.. மத்திய அரசு திட்டவட்டம்..
’’மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற பஞ்சாப் அரசின் வேண்டுகோளை, மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
கொரோனா அச்சத்தால் 30 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கால், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு கஜானாவில் இருந்த காசு முழுவதும் காலியாகி விட்டதால், தங்கள் மாநிலத்தில் மதுக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனப் பஞ்சாப் அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தது.
இதற்கான, பதிலை அனைத்து மாநிலங்களும் ஆவலோடு எதிர் நோக்கி இருந்தன.
பஞ்சாப் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
’’ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிப்பது இல்லை’’ என்று கடந்த 15 ஆம் தேதி புதிய விதிகளை வகுத்து மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
‘அந்த அறிவிப்பில் மாற்றம் இல்லை. ‘’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள மத்திய அரசு, ‘மதுக்கடைகளைத் திறக்க அனுமதி கோரும் பஞ்சாப் அரசின் வேண்டுகோளை ஏற்பதற்கில்லை’’ எனத் தெளிவு படுத்தியுள்ளது.
முதலாம் கட்ட ஊரடங்கு முடிந்த நேரத்தில் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்களும் மதுக்கடைகளைத் திறந்தன.
மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததால், அந்த மாநிலங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகள் இரு நாட்களில் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
– ஏழுமலை வெங்கடேசன்