டெல்லி:  ஆம்ஆத்மி அரசின்  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி மதுபான ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது  தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இடி அனுப்பிய ஒன்பது சம்மன்களுக்கு பதிலளிக்காததால்,  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  மார்ச் 21ந்தி  அன்று இரவு 09:00 மணி அளவில் கைது செய்யப்பட்டார் . மாநில முதல்வர் ஒருவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது.  இந்திய வரலாற்றில் இதுவே முறை.  இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐயும் அவரை கைது செய்தது. இதனால், கடந்த சில மாதங்களாக மக்கள் பணி செய்யாமல், மாநில முதல்வராக கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஊடக பொறுப்பாளர் விஜய் நாயர் பல மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மதுபானக் கொள்கை மூலம் மதுபானம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து 5 முதல் 12 சதவீதம் வரை லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மதுபானக் கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளதாகவும், இது தொடர்பான டெல்லி அரசின் அனைத்து முடிவுகளும் கெஜ்ரிவால் வழிகாட்டுதலின் படியே நடைபெற்றதாகவும் முன்னதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே அமலாக்கத்துறையின்,  சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான   அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது சிபிஐயும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில்,  மதுபான கொள்கை ஊழல்  வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், சிபிஐ மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சிறையிலே உள்ளார்.

இந்த நிலையில், தனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனீஷ் சிசோடியாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு ஆகஸ்ட் 1 வரை அவகாசம் அளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதன் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, அதனை பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.