மதுரை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  செப்டம்பர்  17ந்தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார். செப்டம்பர் 17ந்தேதி பெரியார் பிறந்தநாள். அன்றைய தினம் மதுஒழிப்பு மாநாடு பெண்களால் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர்  திருமாவளவன்,  “முதலமைச்சர் கனவுடன் தற்போது சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்து கொள்கின்றனர்.

ஆனால் நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். அரசியலில் பூமாலை கிடைக்கும் என நினைக்க வேண்டாம், கைவிலங்கிட தயாராக வேண்டும். எனது 27 வயதில் பிரகடனம் செய்தது ”மக்களை அரசியல் படுத்துவோம்” எனும் கொள்கைதான். மேலவளவு  படுக்கொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு பொறுப்புகள் இருந்தன. அதை செய்யவில்லை. போராட்டம், பேரணி என அரசியல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும் என நினைத்தவன் திருமா. அவ்வாறு செய்து இருந்தால் இந்த இயக்கம் வளர்ந்திருக்காது. விசிக நாடாளுமன்றம் வரை சென்று இருக்காது.

விசிக அங்கீகாரம் பெற்ற இயக்கம், 4 எம்.எல்.ஏ, 2 எம்.பி என தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது. பாஜகவுக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் யுக்தம் தற்போது நடத்து கொண்டிருக்கிறது. இதை பிரகடனம் செய்தது விசிக. நாடாளுமன்றத்துக்கு வந்ததும் முதலில் அரசமைப்பு சட்டத்தை தொட்டு தலைவங்கிணார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில்,  ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டால் 174 CRPC வழக்கை காவல்துறை பதிவு செய்கிறது. . இதில் ஆணவம், அலட்சியம் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களை சாதி வெறியர்கள் எனச் சொல்லி காவல்துறை கூட தாக்குதல் நடத்தும் போக்கும் உள்ளது.  ஆனால் சாதாரண வழக்கில் குற்றவாளிகளை தப்பவிடுவார்கள். சாதி சார்புதான் காவல்துறைக்குள்  இருக்கிறது. அது எந்த ஆட்சியில் இருந்தாலும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வழக்கு பதிந்தால் அதை ஆய்வாளர் இல்லாமல் டிஎஸ்பி விசாரிக்க வேண்டும் என்றவர், காவல்துறையில் 10 சதவிகித அதிகாரிகள் மட்டுமே நேர்மையாக உள்ளனர்.

கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம்.  பொதுவாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்கு போடுகின்றது,  யாராக இருந்தாலும் காவல்துறையினருக்கு என ஒரு தன்மை இருக்கின்றது.  கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால் மக்கள் மதுபானக்கடையை மூட சொல்கிறார்கள் என்றவர்,  மதுக்கடைகளை மூடுவது திமுகவுக்கு நல்லது என்றார். மேலும், விசிக சார்பில்  பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.