பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள், விலங்குகளை பார்வையிட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சென்ற ஒரு வாகனத்தை இரு சிங்கங்கள் முற்றுகையிட்டு விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
பூங்கா நிர்வாகம் சார்பில் 8 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அந்த இனொவா காரை மட்டும் அந்த சிங்கங்கள் குறி வைத்து தாக்க முயற்சித்ததாக புகார் எழுந்தது. இது வரை மூன்று முறை அந்த காரை சிங்கங்கள் தாக்க முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படி புகார் வந்தும் அந்த காரை ஏன் மாற்றவில்லை என்று பூங்கா நிர்வாகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் கடந்த திங்கள் கிழமை அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் அந்த காரின் பின்னால் சென்ற மற்றொரு வாகனத்தில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், வரிசையாக 2க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் போது, குறிப்பிட்ட அந்த இனொவா காரை குறிவைத்து சிங்கங்கள் தாக்க முயற்சி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
காரின் முன் புறம் ஏறுவதற்கு ஒரு சிங்கம் முயற்சி செய்கிறது. அந்த கார் நகரும் போது, அதை நகர விடாமல் தடுக்க இரு சிங்கங்களும் முயற்சி செய்கிறது. எனினும் அந்த கார் டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டினார். ஒரு ஆண் சிங்கம் அந்த காரை பின்னால் விரட்டிக் கொண்டே ஓடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இது குறித்து பூங்கா செயல் இயக்குனர் சந்தோஷ் குமார் கடந்த செப்டம்பர் மாதம் கூறுகையில், அந்த இனொவா கார் மீது கடந்த வாரத்திற்கு முன்பு புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரித்த போது சுற்றுலா பயணிகள் சிலர் குறிப்பிட்டு அந்த இனொவா காரை கேட்டுள்ளனர் என்றார். மேலும், விசாரணையில் இனொவா மற்றும் சைலோ ஆகிய 2 கார்களின் டிரைவர்கள் காரை ரிவர்ஸ் கியரில் வித்தியாசமாக நகர்த்தியுள்ளனர். டயர்களை தேய்த்தவாறு நகர்ந்ததால் அது சிங்கங்களை தொந்தரவு செய்தது போல் அமைந்துள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இதன் மூலம் அந்த காரை மாற்றவோ அல்லது டிரைவர்களை மாற்றவோ பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த முறையும் காரை மாற்றவும், டிரைவர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதன்கிழமை அன்று சந்தோஷ் குமார் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், டிரைவர் மீது தவறு உள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை அவர் மீறியுள்ளார். அவர் மீது புகார் வந்துள்ளது. அவர் எச்சரிக்கப்பட்டார். சிங்கம் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. சிங்கங்களுக்கு மிக அருகில் வாகனங்களை கொண்டு செல்லக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை அந்த டிரைவர் மீறியுள்ளார் என தெரிவித்தார்.
ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு சந்தோஷ் குமார் சரியான பதில் கூறவில்லை.
‘‘இங்குள்ள அனைத்து வாகனங்களின் ஜன்னல் பகுதியில் இரும்பு கிரில் அமைக்கப்பட்டுள்ளது. டிரைவர்களின் வசதிக்காக பின் பக்கத்தில் மட்டும் கிரில் அமைக்கப்படவில்லை. மேலும், இப்போது இருக்கும் வாகனங்களுக்கு பதிலாக 30 இருக்கைகள் கொண்ட பஸ்களை இயக்க திட்டமிட்டு வருகிறோம். இது பாதுகாப்பனதாக இருக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.
இது வாகனத்தின் மீதான தவறு என்பதை விட, அந்த சிங்கங்கள் மன அழுத்தத்தில் இருப்பதையே இது காட்டுகிறது என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
‘‘ஒரு விலங்கு குறிப்பிட்ட ஒரு வாகனத்தை மட்டும் குறி வைத்து மீண்டும் மீண்டும் தாக்குவது என்பது சாதாரண காரியமல்ல. விலங்குகள் கலர்களை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது. ஆனால், வடிவத்தை கூர்ந்து கவனிக்கும். அதனால் பூங்கா நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு விலங்குகளை தொந்தரவு செய்வது எது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வன பாதுகாவலரும், வந உயிரின வல்லுனருமான சஞ்சய் குபி தெரிவித்தார்.
ஆனால், பெங்களூரு நிர்வாகம் இதில் கவன குறைவாகவே செயல்படுவதாக தெரிகிறது. சமீபத்தில் சீனாவில் உள்ள வன உயிரின பூங்காவில் சுற்றுலா பயணி ஒருவரை புலிகள் இழுந்து சென்று கடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.