மதுரை
தொடர்ந்து 2 ஆம் நாளாக வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
நேற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது இரண்டாவது நாளாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து இணைப்பு சாலைகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
தேனி வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.