டில்லி

விஜய் மல்லையா மற்றும் நிர்வ் மோடியை போல் 36 தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ, 3600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் இட்டது. அடுத்து ஆட்சியை பிடித்த பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சுஷேன் மோகன் குப்தா என்பவரும் ஒருவர் ஆவார்.

இவர் தன்னை ஜாமீனில் விடக் கோரி மனு ஒன்றை நீதிமன்றத்தில் அளித்துள்ளார். அந்த மனுவில், “தற்போது விசாரணை அநேகமாக முடிந்து விட்டது என கூறலாம். குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நான் ஏற்கனவே அமலாக்கத் துறை நடத்திய விசாரணைகளின் போது முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். என்னை அழைக்கும் போது எல்லாம் தவறாமல் விசாரணைக்கு வந்துள்ளேன்.

எனக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு உள்ளது. அது மட்டுமின்றி எனக்கு அனைத்து தரப்பிலும் நல்ல பெயர் உள்ளது. அதனால் நான் நிச்சயம் இந்த வழக்கில் இருந்து தப்பி ஓட மாட்டேன். இதை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதற்கு அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் சம்வேதன வர்மா மறுப்பு தெரிவித்தார்.

சம்வேதன வர்மா, “தற்போது இந்த வழக்கு விசாரணை மிகவும் முக்கியமான நிலையில் உள்ளது. இந்த வழக்கில் பணம் பெற்றுள்ளதாக குப்தாவின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய புள்ளி யார் என்பது என்னும் தெரியாத நிலையில் வழக்கு உள்ளது. இந்நிலையில் குப்தாவை ஜாமீனில் விட்டால் வழக்கு விசாரணை கடுமையாக பாதிப்பு அடையும்.

குப்தா தனது மனுவில் தனக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் நற்பெயரும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நற்பெயரும் நல்ல மதிப்பும் உள்ள விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற 36 பேர் நாட்டை விட்டு ஓடி உள்ளனர். அவர்கள் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த சில வருடங்களில் மட்டும் இவ்வாறு 36 பேர் தப்பி உள்ள்தை மனதில் கொண்டு இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது “ என வாதிட்டார்.

அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதத்தின் மூலம் விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியைப் போல் 36 பேர் நாட்டை விட்டு ஓடிய விவரம் வெளி வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.