விஜயவாடா

னைத்து மத குருக்களுக்கும் சிறப்பூதியம் வழங்கப் படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அரசின் முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார்.   பதவி ஏற்றதில் இருந்து பல புதிய திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார்.   ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பணி அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்னும் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கடந்த மாதம் ஆந்திர அரசு கிறித்துவ பாதிரியார்களுக்கு சிறப்பூதியமாக மாதம் ரூ.5000  வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.   அதையொட்டி கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சிறுபான்மையினர் நலத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த பகுதியில் உள்ள கிறித்துவ பாதிரியார்கள் எண்ணிக்கை பற்றிக் கணக்கெடுக்க உத்தரவு பிறப்பித்தது.   இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

அதை ஒட்டி பாஜகவினர் ஜெகன்மோகன் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த உத்தரவு அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.   மேலும் ஆந்திர அரசு ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் மற்ற மதத்தினரை ஆந்திர மாநிலத்தவராக கருதுவதில்லை எனவும் தெரிவித்தனர்.   இதை ஒட்டி பாஜக போராட்டங்கள் நடத்த முற்பட்டது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் தரப்பில், “மத குருக்கள் கணக்கெடுப்பு குறித்துப் பல துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதில் ஒன்றாகச் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.   மற்றொன்று இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இதில் பாஜகவின் தவறான புரிதலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  அரசு அனைத்து மத குருக்களுக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்க உள்ளது.

 

இந்த திட்டம் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி அரசால் கொண்டு வரப்பட்டதாகும்.  நாங்கள் இந்த தொகையை அதிகரித்துள்ளோம்.   இந்து அறநிலையத்துறை தேர்வு செய்யும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கும் இஸ்லாமிய மத குருக்களுக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்பட உள்ளது.  அத்துடன் இவர்களுக்கு இலவச வீட்டுமனை அளித்து அதில் அரசு செலவில் வீடுகள் கட்டித் தரவும் உத்தேசித்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.