துர்க்கை அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாப விமோசனம் கிடைக்கும்
சாபம் நீங்கி நல்லது நடக்க துர்க்கை அம்மனை விரதம் இருந்து வழிபடுங்கள்
துர்க்கை அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமணத் தடை. திருமணத் தடை நீக்கப் பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமணத் தடைக்குத் தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருப்பீர்கள். நீங்கள் என்று இல்லை. உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்து இருப்பார்கள்.
அதன் விளைவாகத் தான் திருமணம் கைகூடி வராமல் தள்ளிச் சென்று கொண்டே இருக்கும். ஜாதகத்தில் தோஷம் என்பது பொதுவானது. ஆனால் எந்த தோஷமும் இன்றி சிலருக்குத் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்குத் தான் இந்த பரிகாரம்.
துர்கை அம்மனுக்கு இதைச் செய்வதால் தெய்வ குற்றம் நீங்கும். அதைப் பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். தெய்வக்குற்றம் மட்டும் இல்லை. சாபம் கூட திருமணம் மற்றும் தொழில் தடைக்குக் காரணமாக இருக்கலாம். இந்த பிறவியிலோ அல்லது போன பிறவியிலோ யாருடைய சாபதிற்ககோ நீங்கள் ஆளாகி இருக்கலாம். சாபம் என்பது வழி வழியாகத் தொடர்கதையாக வருவது.
ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியானது சாபமாக மாறும் போது அது கட்டாயம் பலிக்கும். ஆனால் அதன் பலனை அனுபவிக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் போகலாம். அவர்களது சந்ததியினரும் கூட இந்த பலனில் பங்கு கொள்வார்கள். நீங்கள் கேட்டிருக்கலாம்.. சிலர், உன் குடும்பமே தழைக்காமல் போகும். உன் சந்ததியே துன்பமுறும் என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் சாபம் இடுவார்கள்.
அவையெல்லாம் பலிக்குமா? என்று கேட்டால் தெரியாது தான். ஆனால் சில சாபங்கள் மிகவும் கொடூரமான விதத்தில் இருக்கும். சாபம் பலிக்காது என்று கூற சான்றுகள் இல்லை. பலிக்கும் என்பதற்கு சில புராணங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கண்ணகிக்கு இழைக்கப்பட்டது அநீதி. அதன் விளைவாக மதுரையே நிர்மூலமானது. அது போல் சாபத்தினால் கூட தடைகள் ஏற்படக்கூடும்.
அந்த மாதிரியான தடைகளை நீக்கி நல்லது நடக்க இந்த வழிபாடு பெருமளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை.
1. துர்க்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாகத் தாமரைத் தண்டினாலான திரி கொண்டு நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டைச் செய்து அனைவரும் பலனடையலாம். தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான பரிகாரம் தான் இது.
2. தொடர்ந்து ஆறு வாரங்கள் இதைச் செய்து முடித்த பின்னர் அஸ்த நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கை சன்னதிக்குச் சென்று சிகப்பு நிறத்தாலான பட்டுத் துணி ஒன்றை அம்மனுக்குச் சாற்றி, சிகப்பு தாமரைப் பூவினை துர்க்கை அம்மனின் மலர் பாதங்களில் வைத்து 27 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலையாகக் கோர்த்து அந்த மாலையை அம்மனுக்குச் சாற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தைச் செய்த பின் தங்களால் முடிந்த அளவிற்குப் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் தடைகள் நீங்கும். விரைவில் நாம் எதிர்பார்ப்பது கைகூடி வரும்.